புதன், 21 மே, 2014

யாவரும் நிகழ்வு - 21

         சித்திர அன்ன விருந்தும் - இஞ்சி மரப்பாவும்

சகோதரி ரேவா அவர்கள் என்னிடம் ஃபேஸ்புக்  தனிச்செய்தியில் ஒரு கோரிக்கை வைத்தார்கள். //தொடர்ந்து நிகழ்வுகள் நடத்துகிறீர்கள், ஆனால் அதைப் பற்றி சுருக்கமாகக் கூட எழுதாமல்/பதியாமல் இருப்பது// குறித்து கவலைப் பட்டார். உண்மையில் எனக்கு அந்த கோரிக்கை மிகவும் வருத்தம் அளித்தது. 21 நிகழ்வு வரை நடத்தியும் க்ரூப் போட்டோவைத் தவிர வேறு என்ன ஆவனப்படுத்தியிருக்கிறோம் என்கிற போது கொஞ்சம் வருத்தம் வரவே செய்தது.

*
17 மே சனிக்கிழமை மாலை, வழக்கம் போலவே டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடைக்கு கீழேயுள்ள தேநீர் கடையில் வழக்கம் போலவே சரியான நேரத்தில் முதலாம் அமர்வு ஆரம்பித்தது. நிகழ்வின் இறுதி அமர்வும் இங்கே தான் நடக்கும் என்பது கலந்து கொண்டவர்களுக்கு மட்டும் தெரியும். நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர், மோடியின் வெற்றி தமிழகத்தில் அநேக பேரைக் களைப்படையச் செய்திருந்தது. தி.மு.கவைப் பற்றியும், விஜயகாந்தைப் பற்றியும் தமிழகமே உற்சாகமாக பரிகாசம் செய்து கொண்டிருந்த உற்சாகமான நாள் அது. ஆனால் இலக்கியம் பேச வேண்டுமென்று வந்திருப்பதால் முதலாம் அமர்வை முடிந்த அளவுக்கு சீக்கிரமாக முடித்து விட்டு, கடைக்கு சென்றோம்.

...

இரண்டாம் அமர்வு - முதலாம் அமர்வினைப் போல் சரியான நேரத்தில் இது தொடங்குவதில்லை, அமிர்தம் சூர்யா, நறுமுகை தேவி, ஐயா குமரேசன், பத்மஜா, சக்தி ஜோதி, ஐயப்ப மாதவன், நர்மதா குப்புசாமி என்று ஒவ்வொருவராக வந்து சேர்வதற்குள் 06.30 தாண்டிவிட்டது. முதன் முதலாக ஃபேஸ்புக் ஈவெண்ட்ஸ் அழைப்பிலேயே 65 பேர்கள் வருவதாக போட்டிருந்ததால் இந்த முறை அரங்கு நிறையும் என்று நம்பினோம் (70க்கும் குறையாமல் வந்திருந்தனர்).

யாவரும்.காம் பற்றிய ஒரு சின்ன அறிமுகத்தோடு(50 பேருக்கும் மேல் வந்திருக்கிறார்கள் இல்லையா??) உற்சாகமாக அண்ணன் அய்யப்ப மாதவன் ஆரம்பித்து வைத்தார். அதற்கு முன்னர், இந்த புத்தகச் சந்தையில் வெளியான இம்மூன்று புத்தகங்களையும் எளிமையாக அறிமுகப் படுத்துவது அவசியம் என்று அய்யப்ப மாதவன் முன்மொழிந்தார். எதிர்பார்க்காத வரவாக இருந்த கவிஞர்.ஃபிரான்சிஸ் கிருபா அவர்களை வைத்து சாத்தானின் அந்தப்புறம் , தெரிவை என்னும் இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டது. சொல் எனும் தானியம் - இந்நூலை இயக்குநர்/கவிஞர் சூரியதாஸ் வெளியிட்டார் -கவிஞர் ஆதிரா முல்லை பெற்றுக் கொண்டார்.

**
முதலில் தீக்கதிர் ஆசிரியர் குமரேசன் நறுமுகை தேவியின் “சாத்தான்களின் அந்தப்புரம்” பற்றி பேச ஆரம்பித்தார்.

கிட்டதட்ட இரண்டு மாதங்களாக - நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கட்டுரைகளும், பேச்சுகளும், நேர்காணல்களுமாக தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஐயாவுக்கு இரண்டு நாட்களாக தன் கைகளில் ஒரு கவிதை புத்தகம் இருப்பது உற்சாகமாய் இருக்கிறது என்று  தன் பேச்சினை ஆரம்பித்தார். கவிதைகளை முழுக்க முழுக்க தனது அரசியல் கண்ணோட்டத்தில் தனது பார்வையாக முன்வைத்தார். கவிதை நூலில் இருக்கும் கவித்தன்மைகளைச் சுட்டிக் காட்டதவும் அவர் தவறவுமில்லை , எனினும் நறுமுகையின் கவிதைகளை அரசியல் பார்வையுடனும், அதில் பெண்ணியப் பார்வையுடனும் சுட்டிக் காட்டுவதைத் தான் அவர் விரும்புகிறார் என்று தெரிந்தது.

“சமூகத்தின் பிரச்சினைகளை நான்கு பக்கங்களில், தலையங்களில் அலசி அதற்கு தீர்வினையும் எழுதும் என் கர்வம் - சில நேரங்களில் ஒரு நான்கு வரிக் கவிதையில் காணாமல் போகிறது” என்று சொல்லும் பொழுது கவிதை மீதான அவர் காதல் தெரிந்தது. நிகழ்வின் இறுதியில் ஏற்புரை வழங்கிய நறுமுகை தேவி - உணர்ச்சி வயப்பட்ட நிலையிலும், கவிதைகளை தன் ஆயுதமாக(சாட்டையாக) பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் எதனால் வந்தது என்று அழுத்தமாகக் கூறினார். அதனால் தொடர்ந்து சமூகத்தின் மீதான என் கோபத்தினை வெளிப்படுத்தும் கவிதைகள் எழுதுவது தான் என் இயக்கமாக இருக்கும் என்று ஏற்புரை வழங்கினார்.

**
அடுத்தது பத்மஜாவின் தெரிவை நூலுக்கான விமர்சனம், கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட நண்பர் அமிர்தம் சூர்யாவின் விமர்சனம்.

வழக்கம் போலவே எதிர்பார்ப்புடன் வந்திருந்த தன் ரசிகர்களுக்கு ஒரு குறையும் வைக்காத நிறைவான போஜனம் சூர்யாவால் அளிக்கப்பட்டது. “கவிதை நூலினை ஒரு பாதி பத்மஜாவின் கவிகளும், மற்றொரு பாதி மொழிபெய்ரப்புமாகக் கொண்டு வந்தது ஏன்?” என்று விமர்சனத்துடன் ஆரம்பிக்கப் பட்ட இவர் பேச்சு. சமகாலத்தில் பெண்கள் எழுத வேண்டிய கட்டாயம் பற்றி பேச ஆரம்பித்த சூர்யா, சில மொழிபெயர்ப்புகளை முன் வைத்து ஆரம்பித்தார் Anne Sexton குறித்து பேச ஆரம்பித்தார். அவரின் வரிகளில் இருந்து பெண்கள் எழுதுவதற்கான தடைகள் பற்றி என இந்த நூலிற்கான புற வெளிகளைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டு, புத்தகத்திற்குள் நுழைந்தார்.

ஒரு கவிதையில் வரும் “கொல்வாயா” என்னும் வார்த்தைக்கு, ஒரு பெண் “கொல்வாயா?” என்று சொல்வது என்னவாக இருக்கக்கூடும் என்று விவரிக்க ஆரம்பித்தார். தொல்காப்பியர் பெண் கவிஞர்களின் செயல்பாடுகளை வரையறுக்க, அதை எப்படி தகர்த்து எறிந்த பெண் கவிஞரான வெள்ளி வீதியாரின் முதல் முயற்சியை வியந்தபடி வந்த அவர்,  “கொல்” எனும் வார்த்தை காமமாக இங்கே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

 “கவிதை எழுதுபவர்கள் முடிந்த அளவிற்கு எவ்வளவு விரைவாக முதல் புத்தகம் போட முடியுமோ போட்டு விடுங்கள், அது தான் உங்களைத் தொடர்ந்து இயங்க வைக்கும், அதைப் போட்டு விட்டு வேண்டுமானால் சில வருடங்களுக்குப் பின்னர் அது நான் எழுதியதில்லை என்று தப்பித்துக் கொள்ளுங்கள்!!” என்று பதிப்புலகிற்கு லாபகரமான இந்த அறிவுரையை சூர்யா வழங்கிய போது ஒரு பெரிய கைதட்டல் ஒன்று வந்தது. அவர்களில் பல பேர் முதல் புத்தகம் அல்லது அதைப் போடுவதற்காக யோசித்துக் கொண்டிருப்பவர்கள் என்று தோன்றியது.. நானும் கைதட்டினேன் கவிஞன் என்பதால் அல்ல, பதிப்பகம் ஆரம்பித்து விட்டதால் :).

முத்தம் பற்றிய ஒரு கவிதைக்கு - முத்தம் பற்றி சுவாரஸ்யமான தகவல்களுடன் அரங்கத்தை கலகலப்பூட்ட, தக்க சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அய்யப்ப மாதவன் அங்கே அரங்கில் இருந்தோர் பலரை பகடி செய்து (குறிப்பாக அடியேனை) கலகலப்பாக மாற்றிவிட்டார். முத்தம் பற்றிய கவிதைக்கு சுகுமாரனின் கவிதையும், வீடு பற்றிய கவிதைக்கு மாலதி மைத்ரி எனவும் பல கவிதைகளை குறிப்பிட்டு. பெண் கவிஞர்களில் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களில் என முக்கியமான இடத்தை நோக்கி செல்லும் பத்மஜாவை வாழ்த்திய படி நிறைவு செய்தார்.

பத்மஜா தன் விமர்சனத்திற்கு ஏற்புரை வழங்கிய போது, தன் கவிதைகள் தனிமை குறித்த பதிவாகத் தான் எழுதியதாக விளக்கமளித்தார்.

*
இறுதியாக சக்தி ஜோதியின் நூல் குறித்த விமர்சனத்தை நர்மதா குப்புசாமி அவர்கள் முன்வைத்தார்.

முதல் முறை அவர் பேசுவதாக சொல்லிக் கொண்டாலும், கவிதைகளோடு அவருக்கு இருந்த நீண்ட பரிச்சயம் அவர் கவிகளின் nuances பற்றியும் கவிதைத் தன்மை குறித்த பேச்சிலும் நிறைய முதிர்ச்சி வெளிப்பட்டது. தன்னுடைய வாழ்வுடன், தன்னனுபவத்துடனும் மிகவும் நெருங்கிய கவிதைகளாக அவர் குறிப்பிட்டார்.

ஆத்மாநாமின் கவிதைகளையும், வான்காவின் சில குறிப்பிட்ட ஓவியங்களுக்கு மிடையேயான தொடர்பினைக் குறிப்பிடவும் செய்தார். சக்தி ஜோதியின் கவிகளில் காணப்படும் எல்லையற்ற அன்பினை வர்ணித்தார்.

இதற்கு ஏற்புரை வழங்கிய சக்தி ஜோதி தன் கவிதை மீது பொதுவாக வைக்கப்படும் விமர்சனங்களுக்கான பதிலாக தனது வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். எல்லையற்ற காதலுக்கும், அன்பிற்கும் காரணமாக தனது POSITIVE அனுகுமுறையைப் பற்றிக் கூறினார். ஒரு சதவீதமாவது நல்ல குணம் உள்ள எந்த மனிதரையும் நான் நேசிக்கத் தவறுவதில்லை என்றார். மேலும் தன் கவிகளில் வரும் இயற்கையைப் பற்றிய வர்ணிப்பகளுக்கு தன் சிறு வயதிலேயே தான் வாழ்ந்து வந்த மலை மற்றும் நதிகளின் பிரதேசங்களைப் பற்றிச் சொல்லி முடித்தார். தான் வாழ்ந்த ஊர் இன்று ஒரு அணைக்குள் மூழ்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவரது கவிகளின் தனித்தன்மை என நான் நம்பக் கூடியவை மீதான என மனதிலிருந்த கேள்விகளுக்கு அவரிடமிருந்த பதிலாக அந்த ஏற்புரை இருந்தது.

(சமூகம் பற்றிய அக்கறை அவர் கவிகளில் இல்லையா என்று யாரும் கேட்கவில்லை, கேட்டிருந்தால் இன்னமும் அழுத்தமான கதை ஒன்று அவரிடமிருந்து வரும் என்பதும் எனக்குத் தெரியும்)

இப்படியாக வேல்கண்ணனின் உரையுடன், அருந்திய லெமன் டீ மற்றும் இந்த சிந்திர அன்னவிருந்தின் நினைவாக சில குழு போட்டாக்கள் க்ளிகிடப்பட்டது.  விழாவுக்கு முக்கியமான படைப்பாளிகள் நிறைய பேர் வந்திருந்தனர். பெரும்பாலான நண்பர்கள் இந்த அமர்வுடன் கலைந்து சென்று விட்டனர் - இரவு 10.00 மணி.

***
சற்றுத் தாமதமாக ஆரம்பிக்கப் பட்ட இறுதி அமர்வு மீண்டும் தேநீர் கடையில் ராகி மால்ட்டுடன் ஆரம்பித்தது சினிமா, அரசியல், கம்யுனிஸ்டுகள் என்ற தலைப்புகளில் சிறு சிறு குழுக்களாக கு.பட்சம் மூன்று குழுக்களாவது பேசிக் கொண்டிருந்தது. இறுதியில் கவிதையிலேயே இந்த அமர்வும் தன்னை முடித்துக் கொண்டது. கவிதைகளைப் பற்றி அதன் கோணங்கள் பற்றி என்று, சினிமா பற்றி பேசிக் கொண்டிருக்கும் அர்விந் கவிதைகள் பற்றி நிறைவுரையாற்றினார்.

இஞ்சி மரப்பா குறித்து தலைப்பிட்டு விட்டு அதை விளக்காமல் போனால் எப்படி - வழக்கம் போல சூர்யாவின் ஒவ்வொரு பேச்சிலும் சலசலப்பிற்கும் குறைவில்லாமல் ஏதோ ஒரு விஷயம் அசை போடுவதற்கு கிடைக்கத் தான் செய்யும். இந்த முறையும் ஒரு நண்பர் சூர்யாவின் பேச்சில் புராணங்களில் இருந்து தரவுகளை( ஒரு கவிதையில் காதலை பிரம்மஹத்தி தோஷம் என்று பத்மஜா குறிப்பிட்டமைக்காக - பிரம்மஹத்தி தோஷம் பற்றியும், சதாசிவம் எனும் புராணத்தில் வரும் சிவனின் உடலமைப்பைப் பற்றியும்) எடுத்துப் பேசியமைக்காக தன் கண்டனங்களை பதிந்து விட்டுப் போனார். அதைச் சொல்லி சொல்லி நண்பர்களுடன் சிரித்துக் கொண்டே சபையை கலைக்கும் முடிவுக்கு வந்தோம்.நான்கு இரண்டு சக்கர வாகனங்கள் ஒவ்வொரு திசையில் கிளம்பியது.

சூர்யா - பனங்காட்டு நரி இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது, அது தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருக்கும்.

இந்தக் கட்டுரையை எழுதச் சொன்ன சகோதரி ரேவா பக்கங்களுக்கே சமர்பிக்கிறேன்.


இதை வாசிப்பவர்களுக்கு இலவசமாக இந்த காணொளிக் காட்சியும் காட்டப்படுகிறது
https://www.youtube.com/watch?v=4hYXmgEwbh0

- ஜீவ.கரிகாலன்


2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. பார்க்கத் தவறி விட்டோமென்ற நினைப்பை இந்த பதிவு ஓரளவு தீர்த்ததாய் உணர்கிறேன். சொன்னதும் நிகழ்வை பதிவாக்கிட்ட அண்ணனுக்கு அன்பும் நன்றியும். தொடர்ந்து யாவரும்.காமின் நிகழ்வுகள் அத்தனையும் சிறக்க என் அன்பும் வாழ்த்தும்

    பதிலளிநீக்கு