வியாழன், 9 ஜனவரி, 2014

செர்வண்ட் மெய்ட்
திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் ஒருவர் வேலையை விட்டு நின்று போனால் நமக்கு கோபம் தான் வரும். எனக்கும் வந்தது. ஆனால், அந்த கடுமையான கோபம் என் மீதே:


எங்கள் அலுவலகம் - ஐந்து வருடத்திற்கு முன்னர் இப்போதிருக்கும் இடத்திற்கு மாறும் முன்பு அந்த இடத்தில் முன்னர் குடியிருந்தவர் வீட்டு உரிமையாளரின் அபிமானம் பெற்றவர். அதனால் எங்கள் அலுவலத்தை சுத்தம் செய்வதற்கு அவரே ஆள் பார்த்துத் தருவதாகச் சொன்னார். புதிய இடம் என்பதால் ஒத்துக் கொண்டோம். அவரே அந்தப் பெண்மணிக்கு விலை நிர்ணயம் செய்தார் 1400 ரூபாய் மாதச் சம்பளமாக இருந்தது. எங்கள் அலுவலகத்தின் கொள்கைகளில் ஒன்று (ஊழல் அல்லது ஒழுக்கமற்ற செயல் புரிவோரைத் தவிர்த்து) எந்த காரணத்தைக் கொண்டும் வேலையை விட்டு அனுப்பக் கூடாது, அவர்களாகச் செல்வார்களாயின் செல்லலாம்.


சில மாதங்களுக்கு முன்பு எங்கள் அலுவலகம் இருக்கும் இடத்திற்கு வந்த அவர், “உங்கள் அலுவலகம் சரியாக பராமரிக்கப்படவில்லை நான் வேறு யாராவது ஒருவரை அனுப்புகிறேன். நீங்கள் அவரை நிறுத்திவிடுங்கள்” என்று அவர் சொன்னார். வேறு வழியில்லாமல் அந்தப் பெண்மணியிடம் சம்பளத்துடன் கொஞ்சம் அதிகப்படியான தொகையைக் கொடுத்து விஷயத்தைச் சொன்னோம். கடும்கோபத்துடன், அவரை வசைபாடிக் கொண்டே  வெளியே சென்றார். பின்னர் 2000 ரூபாய்க்கு மற்றொரு பெண்ணை அமர்த்தினார், அந்தப் பெண்மணியைக் காட்டிலும் இவரது வேலையின் தரம் சற்றுக் குறைவு தான். ஆனாலும் சமாளித்து வந்தோம்.


இப்போது திடீரென்று ஒருநாள் என்னை அழைத்த வீட்டு உரிமையாளர், அந்தப் பெண்மணி வேலையை விட்டு நிற்க விரும்புவதாக அந்த மனிதரிடம் சொன்னாதாகவும், வேறு யாராவது ஒருத்தரை அவர் அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். அதற்கு நான் சொன்னேன்,”ஏற்கனவே அவர் பார்த்துக் கொடுத்ததால் தான் நாங்கள் அதிகம் சம்பளம் கொடுத்தோம், இனிமேல் மாற்றுவதாக இருந்தால் நல்ல வேலையாளாக நாங்களே பார்த்துக் கொள்கிறோம்” என்றேன். எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அவர் தான் அந்த மனிதரின் வீட்டிலும் வேலை பார்த்து வந்தார், இதற்கு முன்னால் வேலை பார்த்தவரும் அவ்வாறே வேலை செய்து வந்தார். அந்த மனிதர் ஏதோ காம்போ பேக் ஆஃபரில் வரும் டிஸ்கவுண்டிற்காக இவ்வளவு மெனக்கிடுறாரோ என்று தோன்றியது.


நேராக அந்தப் பெண்மணியிடம் விசாரித்தபோது,  தனக்கு வேறு இடத்தில் , அபார்ட்மெண்ட் சர்வீஸிற்கு வேலை கிடைத்திருப்பதாகவும், அங்கே ஈ.எஸ்.ஐ, இன்ஸ்யூரன்ஸ் எல்லாம் தருவதால் பகலில் வேலை பார்க்க முடியாது என்று அந்த மனிதரிடம் சொன்னதாகவும், அதற்கு அவர் - அப்படியென்றால் மாலையில் வேலை செய்யும் இடமான எங்கள் அலுவலகத்திற்கும் அந்தப் பெண்மணி வேலைக்கு செல்லக்கூடாது என்றும்; அவரே வேறு ஆளை நிர்பந்தம் செய்து விடுகிறேன் என்றும்; தன்னிடம் சொன்னதாக அப்பெண் என்னிடம் கூறினார். 

எனக்கு சட்டென கோபம் வந்தது.

“அவர் ஒன்னும் இங்கு முதலாளியில்லை, நீங்க இங்கையே இருங்க அக்கா!!” என்றேன். 

அவர் கண்களில்  கண்ட மலர்ச்சியை கவனிக்கும் போது நாம் சொன்னது சரியே என்று தோன்றியது.அடுத்த நாள் நான் இல்லாத நேரத்தில் என் அலுவலகத்திற்கு வந்து, அந்தப் பெண்மணி வேலையை விட்டு நிற்க வேண்டும் என்று சொன்னதாகவும், வேறு ஆளை தான் அமர்த்துவதாகவும் சொல்லியிருக்கிறார். எங்கள் அலுவலகத்தில் என்னிடம் சொல்வதாகவும் நான் தான் இதை கவனித்து வருவதாகவும் சொல்லி விட்டனர். அவர் தன் நம்பரை எழுதி வைத்து விட்டு போனார். மறுபடியும் அவரிடம் பேசுவதற்கு முன் அந்தப் பெண்மணியிடம் பேசினேன். அவர் சொன்னார் தன் கணவனுக்கு போன் செய்து ”அந்த அலுவலகத்திற்கு போகக் கூடாது” என்று மிரட்டியதாகச் சொன்னார். “அக்கா!! அது உங்க பிரச்சினையில்லை என் பிரச்சினை ”என்று சொன்னேன். 

அப்போதே போன் பண்ணி வீட்டு உரிமையாளரிடம் பேசி இவர் தலையிடக் கூடாது என்று சொல்லியிருக்கலாம் தான். என் தவறு நான் சொல்லவில்லை, இது பெரிதாக வளரும் என்று அலட்டிக் கொள்ளவில்லை.


இரண்டு நாட்கள் கழித்து, காலை வேளையில் ஒரு மனிதர் வெறி பிடித்தவர்  போல் உள்ளே நுழைந்தார். கொற்றவையோ, காளியோ என்று சிலம்பில்  வருவது போல வீரபதரனோ, முனியோ என்ற சந்தேகம் வருமாறு அவர் கோபத்துடன் உள்ளே வருவது தெரிந்தது. முதலில் அவர் யாரென்று தெரியவில்லை, பின்னர் தன்னை ஏன் இன்னும் யாரும் அழைக்கவில்லை என்று கேட்கும்போது தான் புரிந்தது. “அவனா நீ?” என்று.


“என்ன விசயம் சார்?”
“அந்த ஸர்வெண்ட் மெய்ட் இன்னும் வர்றாங்களா??”

“ஆமா”

“ஏன்??”

“புரியல”

“ஏன் நிறுத்தல”

“ஏன் சார் நிறுத்தனும்?, அவர் நன்றாகத் தான் வேலை செய்கிறார்களே?”

“நான் மெயிண்டன்ஸ் பண்ணனுமா வேண்டாமா??”

“சார் இத்தனை வருடமா நாங்களே தான மெயிண்டெனன்ஸ் பண்ணி வர்றோம்”

“ஹலோ, நான் தானே அந்த வேலைக்காரிய உங்களுக்கு அனுப்பினேன்?”

“அதுக்காக ஒரு கான்க்ரீட் ரீஸன் இல்லாம நாங்க யாரையும் வெளியே அனுப்ப முடியாது” என்றேன் திட்டவட்டமாக.


“உங்களுக்கு நான் சொன்னா புரியாதா?? அந்தப் பெண்ணோட ஹஸ்பண்ட் அவளை சந்தேகப் படுறார்.. வீட்ல வயசுக்கு வந்தப் பெண்ணை விட்டுட்டு.. சாயங்காலம் எங்கேயோ வேலை பார்க்குறா என்று சந்தேகப்படுறார்.. அவர் என்கிட்ட தான் பேசுறார்... அதனால் அவள நிறுத்திடுங்க ந்.... நான் அவ ஹஸ்பண்ட் கிட்ட சொல்லிடுறேன்”

“நானும் எங்க ஓனர், ஹவுஸ் ஓனர்ட்ட பேசிட்டு சொல்றேன்,,”

“அப்போ நான் வேற ஆள வரச் சொல்லுறேன்”


“நான் முதல்ல இந்தம்மாகிட்டப் பேசுட்டு சொல்றேன்”

அவருக்கு திருப்தியான பதில் தராததால்,படக்கென்று ஏதோ முனங்கியவாறே வெளியே சென்றார். நானும் கம்ப்யூட்டருக்குத் திரும்பும் போது தான் கவனித்தேன் கால்களுக்கு கீழே.. கிழித்துப் போட்ட பேப்பர்கள் இருந்தன.


“சார்.. சனிக்கிழமை அவங்க வரலையா??”
“ஆமா வரலை”
“ஒருவேளை..”
“ஒருவேளை அவுங்க இன்னிக்கும் வராம இருந்துட்டாங்கனா??”


மூன்று நாள்கள் பொறுத்து பார்த்தோம், அந்தப் பெண்மனி வரவில்லை. அவருக்கு செல்போனில்லை என்று சொன்னதால் வேறு வழியுமில்லை. அன்றே அவர் சொல்லியிருக்கும் போது, அவரை வீட்டுக்கு அனுப்பியிருந்தால் குறைந்தபட்ச ஒரு மாத சம்பளத்தையாவது கூடுதலாகக் கொடுத்திருப்போம். அவர் வேலை செய்த மூன்று நாட்களுக்கும் சம்பளம் வாங்கவில்லை. என் மீதே எனக்கு கோபம் வந்தது.இதை முதலாளித்துவம் என்றெல்லாம் அரசியல் செய்ய விருப்பமில்லை. ஒருவர் மீது எந்த உரிமையும் தனக்கில்லாத போதும் அவர்கள் வாழ்வதை நம்மால் கெடுக்க முடியும் என்கிற எண்ணம் எத்தகைய உயர்ந்த இடத்தில் இருக்கும் மனிதருக்கும் வந்து விடுகிறதே என்று கோபம் வந்தது. அவர் ஜெயித்தது கூட பரவாயில்லை, அந்தப் பெண்மணிக்கு உரிய பணத்தை கொடுக்க முடியாமல் போனதே எனக்கு மனச்சோர்வு தந்தது.


“நாம் தான் தோற்றுப் போகும் இடத்திலிருக்கிறோமே!! அப்புறம் எதற்கு வீரவசனம்.??.” என்று என் சக நண்பரிடம் சொல்லிக் கொண்டே, அவருக்கு கொடுக்க வேண்டிய இரண்டு ஆயிர ரூபாய் தாள்களின் சுமை தாங்க முடியாமல் எடுத்து டேபிள் லாக்கரில் வைத்தேன்.


.....

கதையை இத்தோடு முடித்திருக்க வேண்டும் தான். நேற்று, ஒரு டை கட்டிய பேங்க் எக்ஸிகியூடிவ் அந்த மாமனிதரின் பெயர் கேட்டு வந்தான்(ஏற்கனவே பல பேர் விசாரித்திருக்கிறார்கள்). வழக்கம் போல் எங்களுக்குத் தெரியாது என்று திருப்பி அனுப்பினேன்.

“எக்ஸ்கியூஸ்மி”
“சொல்லுங்க சார்?”
“நீங்க எந்த பேங்க?”
“ICICI”
"டீம்?"
“பெர்சனல் லோன் கலெக்‌ஷன் சார்”

எனக்கும் ஒரு வாய்ப்பு கிட்டியது, பயன்படுத்தினேன்.

 “பாஸ்!!லோன் எத்தனாவது பக்கெட்??”

அவன் கண்கள் மின்னியது .
“தாங்க்ஸ் சார்..... அது வந்து அவரோடது நாலாவது பக்கெட்” முதலில் மூன்று விரல்களும், சுதாரித்து விட்டு நான்கு விரல்களையும் நீட்டினான்.

மின்விசிறிக்கு நேர் கீழிறிந்த டேபிள் மீது ஒரு நோட்பேடின் காகிதங்கள் flipஆகிக் கொண்டிருந்தன.... அந்த மனிதரின் கையெழுத்தில் அவர் எண்கள் ‘பளிச்’ என்று தெரிந்தன.


-ஜீவ.கரிகாலன்

1 கருத்து:

  1. //“நாம் தான் தோற்றுப் போகும் இடத்திலிருக்கிறோமே!! அப்புறம் எதற்கு வீரவசனம்.??.”//
    சில நேர்வுகளில் மனசாட்சியின் நீதியின்படி நடப்பவர்களுக்கு இது தாங்க முடியாதவலியாகிவிடுவது கசப்பான உண்மைதான்...

    என்ன செய்ய.... கடவுள் இது போல சிலரையும் அவர்களைபோல் பலரையும் படைத்தது விடுகிறார்... (இதனால் தான் கடவுள் மீது பல சமயங்கள் எனக்கு கோபம் வருகிறது)

    பதிலளிநீக்கு