செவ்வாய், 20 நவம்பர், 2012

பஜ்ஜி-சொஜ்ஜி-06 மூங்கில் சைக்கிள்


      உலகெங்கும் சத்தமே இல்லாமல் பிரபலாமாகிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்றவுடன் ஐபோன்-05ஆ? புதிய ரக சொகுசுக்காரா ?அல்லது ஏதும் ரோபோவா? என்றெல்லாம் தானே யோசிக்கத் தோன்றுகிறது?, ஆனால் அதுவல்ல. இது மூங்கில் சைக்கிள் என்று சொல்லப்படும் BAMBIKE-ஐப் பற்றியது. உலகெங்குமே பல்வேறு இடங்களில் இந்த மூங்கில் சைக்கிளை வடிவமைக்கும் சில நிறுவனங்கள் இரண்டு, மூன்று வருடங்களாக செயல்பட்டு வருகின்றன(கொலம்பியா, ஆப்பிரிக்கா, ஃபிலடெல்பியாவில் இதற்கென பிரத்தியோக ஆய்வுக் கூடங்கள் இருகின்றன. நமது நாட்டிலும் பெங்களூரைச் சேர்ந்த விஜய் சர்மா எனும் உட்புற வடிவமைப்பாளர் (interior designer) தனது சொந்த முயற்சியில் இந்த BAMBIKE என்ற பெயர் வைத்துள்ள மூங்கில் சைக்கிளை வடிவமைத்துள்ளார்.

       தனது தந்தையுடன் சேர்ந்து கற்றுக்கொண்ட மர தச்சுவேலை தான் இதை உருவாக்குவதற்கு காரனம் என்று தன் தந்தையை நினைத்துப் பார்க்கிறார். தான் படித்துக் கொண்டிருந்தாலும் தன் தந்தையுடன் சேர்ந்து பார்க்கும் தொழில் தன் குடும்பத்திற்கு நிதி அளிப்பதுடன், தனக்கும் எதிற்காலத்தில் கைகொடுக்கும் என்று தன் குலத்தொழிலை நம்பியதாகவும் சொல்கிறார். இப்போது நம் நாடு மட்டுமின்றி, பல தேசங்களில் நடைபெற்று வரும் கண்காட்சியில் இவர் வடிவமைத்த சைக்கிளும் முக்கிய இடம் பிடித்து வருகிறது. தன் ஆர்வத்திற்கு ஏற்றார் போல் தன் கல்வி அமைந்ததும் இதை சாத்தியமாக்கியது என்றும் சொல்கிறார்.(அதன் விவரம் கீழே)

  மூங்கில் சைக்கிள் என்றால் என்ன ?  மூங்கில் சைக்கிள் என்பது ஒரு திட்டம், முழுவதுமாக அன்று, சைக்கிள் பாகங்களில் எவ்வளவு அதிகப்பட்சம் மாற்றக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனை வாய்ப்பையும் பயனபடுத்துவது தான். பொதுவாக, சைக்கிளின் தண்டு, கம்பிகள், கைப்பிடி, பின்னிருக்கை என எஃகு, அலுமினியம் போன்ற உலோகங்களுக்குப் பதிலாக இங்கே உறுதியான மூங்கில் உபயோகிக்கப் படுகிறது.

  ”மூங்கில் சைக்கிள்- மிகவும் உறுதியானது அதை கம்பிகளுக்கு இணையான உறுதி என்றும், அதிர்வுகளைத் தாங்குவதில் அது உலோகங்களைக் காட்டிலும் அதிகப் பயனுள்ளது என்றும் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் அதன் தோற்றமும் கவர்ச்சியுடன் இருப்பதோடு, இது ஒரு கைவினைப் பொருளாக  இருக்கும் என்பதால் இதை ஓட்டும் பொழுது நமக்கு ஒரு பெருமை இருக்கும் என்றும் கூறுகிறார் சர்மா. நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் மூங்கில் வீடுகளிலே குடியிருப்பதைச் சுட்டிக் காட்டுவது இதன் உறுதித் தன்மைக்கு மற்றுமொரு ஆவனம்.

இந்த சைக்கிள் தற்பொழுது அறிவியல் பூர்வமாக BSA சைக்கிள்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு, இதன் வடிவமைப்பிற்கு ஜப்பானின் தொழிற்துறை அளவீடுகளில் தேர்ச்சி பெற்று சாலைகளில் ஓடுவதற்கான அனைத்து துகுதியையும் பெற்றுவிட்டன. ஆனால் இதைப் பெருவாரியான வணிக உற்பத்திக்காக தயாரிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன அதாவது இதற்கு மூலப் பொருளான மூங்கில் ஒரே மாதிரியானத் தரத்தில், வடிவத்தில், உறுதியில் கிடைக்க வேண்டும். அதே சமயம் இயற்கையின் வாழ்க்கை சக்கரத்தில்(life cycle) காடுகளில் இருக்கும் மூங்கிலுக்கு மிகப் பெரிய அளவில் வனத்தை பாதுகாப்பதிலும், உணவுச் சங்கிலியில் இடம் பெறுவதிலும் பங்கு இருக்கிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

     ஆனால் இன்று இருக்கும் நவீன ரக சைக்கிளின் சிறப்பம்சங்களோடு ஒப்பிட்டால் இதன் செயல்திறன் குறைவாக இருக்கும் என்று கருதினால், இந்த மூங்கில் சைக்கிளிற்கு இருக்கும் வரவேற்பை மேற்கத்திய நாகுகளில் பார்க்க வேண்டும். இந்த சைக்கிளை ஓட்டுவதை அவர்கள் பெருமையாகவும், சிறப்பாகவும் நம்புவதை உணரலாம். ஆனால் இதை எல்லோரும் பயன்படுத்தும் அளவிற்கு விலை குறைந்ததாக மாற்றினாலே இதன் சந்தை விரிவடையும். ஆப்பிரிக்காவில் இது போல சைக்கிளை இறக்குமதி செய்வதற்கு பதிலாக தன்னார்வத்துடன் பலர் இதை உருவாக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல். மேலும் ஆப்பிரிகாவில், இந்த மூங்கில் சைக்கிள் தனியாக உழைப்பை மையப்படுத்தி (labour intensive) ஒரு சிறு தொழிலுக்கான வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.

     ஆனால் இந்தக் கட்டுரையை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது என் நன்பர் சொன்னார், “அது என்ன இகோ ஃபிரெண்ட்லி(eco-friendly) சைக்கிள்?  முதலில் நாமெல்லாம் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தாலே எது இகோ ஃபிரெண்ட்லி தானே!! என்றார், மறுக்கமுடியவில்லை. நமக்கு சைக்கிள் ஓட்டும் பழக்கம் நாளடைவில் வெகு வேகமாக குறைந்து வருகிறது என்பது நோரு சமயம் உன்மையே, இன்று சரியான சாலை வசதி இல்லாத கிராமங்களில் கூட இதே நிலைமை தான். ஆக, நமக்குத் தேவையான மாற்றம் மிகப்பெரியது.

   சில மாதங்களுக்கு முன் பெட்ரோல் விலையை ஐந்து ரூபாய் அரசு ஏற்றும் போது நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் நிலை எப்படி இருந்தது தெரியுமா? அலுவலகம், டீக்கடை, சலூன்,பேருந்து நிறுத்தம், பெட்ரோல் பங்க், கோயில்கள், ஏன் வாகன நெரிசலில் ஊர்ந்து கொண்டிருக்கும் போதும் மக்களிடம் ஒரு ஆவேச அலை இருந்தது, பேச்சில் ஒரு கொந்தளிப்பும், மனவுளைச்சலும் இருந்தது. “மக்கள் விரோத அரசு”, “துரோகம் செய்த அரசு, “நாட்டில் புரட்சி உருவாக வேண்டும்,  என்றெல்லாம் எங்கு காணினும் பேச்சு இருந்தது. சிலர் தங்கள் வாகனங்களுக்கு தற்காலிக விடுமுறை கொடுத்து விட்டு பொது வாகனங்களில், பேருந்தில், ரயிலில் சென்று வர ஆரம்பித்தனர்.

     எல்லா கொந்தளிப்பும், ஆவேசமும் எங்கே போனது என்றே தெரியவில்லை, எல்லாம் பழகி விட்டது அதற்கு பின் டீசல் விலை, சிறிய அளவில் பெட்ரோல் விலை என்றெல்லாம் பார்த்தாகிவிட்டது, இதன் விளைவாக சாதாரன நடமாடும் வண்டிகளில் இருக்கும் கையேந்தி பவன் முதல் சரவண பவன் வரை விலையேற்றம் வந்தது, டீக்கடை முதல் ஷேர் ஆட்டோ வரை எல்லாமே ஏறிவிட்டது, அதே சமயம் எல்லாவற்றையும் நாம் பழகிவிட்டோம். நமது நாட்டில் மிகப் பெரிய பலமே நம் மக்களின் சகிப்புத் தன்மை தான்.

       ஆனால் நம் சகிப்புத் தன்மையை அப்படி உடனே மெச்சிவிட முடியாது, அடுத்த தெருவில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கு கூட இருசக்கர வாகனம் என்று நம் பழக்கத்தை ஏதாவது மாற்றியிருக்கிறோமா என்றால் இல்லை. இதில் பண விரயம், உடல் நலக் கேடு, சோம்பேறித் தனம், சுற்றுச் சூழல் கேடு, பொருளாதார சீர்கேடு (எந்த ஒரு ஆற்றலையும் வீனாகப் பயன்படுத்துவது பொருளாதரத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும்). நமது அரசின் செயல்பாட்டை விமர்சிக்கும் போது மட்டும் நான் எத்தனை நாட்டு அரசுகளோடு விமர்சிக்கிறோம்? அதுபோல நம்மையும் அது போல சில அயல்தேசத்து மக்களோடு ஒப்பிடலாமா?

         ஜப்பான், சீனா மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி என்ற எல்லா நாடுகளிலும் இன்று சைக்கிள் தான் ஒரு பிரதானமான வாகனமாக இருந்து வருகிறது, ஆனால் நம் நகரங்களிலோ தொடர்ந்து சைக்கிள் உலாவும் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உலகில் உள்ள பெரிய நகரங்களில் எல்லாம் சைக்கிள்களை பகிர்ந்து கொள்ளும் திட்டம் அமுல் படுத்தியாகிவிட்டது, இதன்படி சைக்கிளை ஓட்டுவதற்கு முன்பணம் செலுத்தி நீங்கள் பதிவு செய்துவிட்டு, ஒரு சிறுதொகையை வைப்பு நிதியாக கொடுத்துவிட்டு நகரமெங்கும் பல இடங்களில் இருக்கும் சைக்கிள் காப்பகத்தில் எங்கு வேண்டுமானலும் எடுத்துக் கொண்டு, நம் உபயோகித்த பின்பு வேறு எந்த நிலையத்திலாவது விட்டு விடலாம். சீனாவின் மிகப்பெரிய தொழில் நகரங்களுள் ஒன்றான ஹாங்ஜோவில் கிட்டதட்ட 2050 சைக்கிள் நிலையங்கள் உள்ளன, இத்திட்டம் வாசிங்டன், லண்டன், மெல்போர்ன், மெக்சிகோ போன்ற எல்லாநாட்டின் நகரங்களில் பெரிதும் வரவேற்க்கப் பட்டு அமுல் படுத்தப் பட்டுள்ளன, மும்பையில் கூட வெறும் இரண்டு நிலையங்கள் வைத்து, அதன் மூலம் இந்த பட்டியலிலும் நம் நாடு இடம்பெறுகிறது. நெதர்லாந்தின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமில் சராசரி இயந்திர வாகனத்தின் பயனத்தை விட, சைக்கிள் பயணமே அதிகம் செய்யப்படுகிறது என்பது ஐரோப்பிய கலாச்சாரம் கூட எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை உணரலாம்.

           ஒவ்வொரு தேசமும் சைக்கிளை உபயோகப் படுத்துவதற்கான காரணம் என்ன்வென்று பார்த்தால் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகிறது, சீனாவில் மற்ற வாகனங்களை நிறுத்திவதற்கு நகரங்களில் இடமில்லை அதாவது இடநெரிசல், ஜப்பானில் உள்ள மக்களுக்கு எப்பொழுதும் சேமிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது, இதில் நிறையவே சேமிக்கிறார்கள், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இயற்கையைப் பாதுகாக்க வாகனங்களைத் தவிர்த்துவிட்டு சைக்கிளை உபயோகிக்க அறிவுறுத்தப் படுகின்றனர் பொது மக்கள். பொதுவாக எல்லா நாட்டிலும் ஒரு நாள் ஒரு மணி நேரம் ஓட்டும் சைக்கிளால் நம் உடலில் குறையும் கலோரிகளின் எண்ணிக்கை தான் எல்லொருக்குமே பெரிதும் ஈர்க்கும் விஷயம், அதுவும் நம் நாடு என்றால் எல்லா காரணங்களுமே அவசியம் தான்.

      மூங்கில் சைக்கிள் விலை அதிகமாக இருக்கிறது என்று சொல்லும் மக்கள் தம் ஒரு வருட இருசக்கர வாகனத்தின் செலவுகளை கணக்கில் கொள்ள வேண்டும். நம் நாட்டில் இது போன்ற பழக்கத்தை மக்களாகவே ஏற்றுக் கொண்டு, விலை குறைந்த, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, உறுதியான மூங்கில் சைக்கிளில் நகரத்தில் வலம் வந்து நம் பணத்தையும் மிச்சப் படுத்தி, உடல் நலத்தையும் பேணலாம். எந்த தேசத்தின் கனவிற்கும் முதலில் காலடி எடுத்து வைத்து மாற்றத்தை முதலில் கொண்டு வரும் பங்கு வெகுஜனத்தைச் சார்ந்ததே.
**************
        இதன் வடிவமைப்பாளர் படித்த Centre for Environmental Planning and Technology, அஹமதபாதில் இயங்கி வரும் இந்த பல்கலைகழகம் கட்டுமானத் துறையில் பல்வேறு பிரிவுகளிலும், கிராம மேம்பாடு, நகர மேம்பாடு என்று பல்வேறு புதிய பாடத் திட்டங்களைக் கொண்டுள்ளது, இன்றைய உலகில் தமது பாதையை மிகவும் குறிப்பிட்ட தளத்தில் இயக்கி வெற்றி காண விரும்பும் இளைஞர்கள் இந்த பல்கலைகழகம் வழங்கும் படிப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு : http://www.cept.ac.in/.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வளிமண்டலத்தில் ஊடுருவும் புற ஊதா கதிர்களை தடுத்து நிறுத்தும் சுற்றுச்சூழல் காவலனாக மூங்கில் காடுகள் விளங்குகின்றன. மூங்கில் காடுகளின் பாதுகாப்பு நம் நாட்டிற்கு மிக முக்கியம்.

 எப்படியோ என் உடம்பு குறைய சைக்கிள் வாங்கலாம் என்று முடிவு பண்ணும் போது, ஒரு கட்டுரை எழுதியாகி விட்டது


பஜ்ஜி-சொஜ்ஜிஇன்னும் சுவையுடன் அடுத்த வாரம்ஜீவ.கரிகாலன்

(நன்றி:சுதேசி செய்தி)

1 கருத்து: