செவ்வாய், 12 ஜூன், 2012

கரைதல்


நித்தமும் துடித்திடுமாறு
சபிக்கப்பட்ட மனம்
காயங்களால்
கட்டப்பட்டிருக்க,
அதிகாரத் திமிரில்
ஆணவ மூளையோ
ஆசை காட்டியே
ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

மூளைக்கும் மனதிற்கும்
மையமான சூன்யத்தை
அகாலக் குழியிலிருந்து
மீட்டெடுக்க,
காமம் முனைந்திடுமுன்னே
மதம் தன்
கோட்பாட்டுக் கத்தியில்
அறுத்தெறிந்தது.

அறியாமையைப் புலர
வைக்கும் ஞானப் பரிதியோ!
காதலென்ற மயக்கத்தில்
உளறுகின்றது.
தளைகளை உடைத்தெறிய
தேவைப் படும் ஒரு கணம்
ஒவ்வொன்றாய் மடிந்து
போகின்றன..

வாழ்க்கை நதியில்
நீந்திக் கொண்டிருக்கும் நான்
மரணச் சாகரத்தில்
சங்கமிக்கும் முன்னர்
உள்ளீடற்ற மூங்கில் ஆவேனா ?
எந்தப் பக்கம் வீசும்
காற்றிலும் இசையாய்
பரிணமித்துக் கடலில்
கரைவேனா ??
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக