வெள்ளி, 13 ஜனவரி, 2012

காதலைச் சொல்லும் வேளை


காதலைத் தான் சொல்லப் போகிறேன் 
என்று அவளுக்கும் தெரியும் 
தன்னை நிராகரிக்க தான் போகிறாள் 
என்று எனக்கும் தெரியும் 


அடுத்த நாள் சந்திக்க இடம் குறித்தோம்.
இளவேனில் மாலையில் எங்கள் 
நண்பனின் அலுவலகம் தேர்வானது 

காலங்காலமாய் நண்பர்கள் தானே 
காதல் செடிக்கு உரம்??
சம்மதித்தான், சந்திக்க இடமளித்தான்.

இறைவன் உருவாக்கிய 
காதல் மலராம் ரோஜா
 என் சிந்தையில் வந்து
இன்று என் விலை இருபது என்றது,
பூக்கடைக்கு சென்றேன்.

கூட்டமாய் இருக்கும் மலர் செண்டு 
கவர்ச்சியாய் தோற்றமளித்தது,
இதயம் - மனிதனுக்கு ஒன்று தானே !
ஆக வாங்கினேன் ஒரே ஒரு 
இதயப் பூ!!!

நூறு தடவை கண்ணாடி பார்த்தாலும் 
திருந்தாத முக வெட்டு எனக்கு,
முதல் தடவை பார்க்கும் போதே - பிம்பமும்
 ஆசை கொள்ளும் வதனம் அவளுக்கு.

கனிந்துக் கொண்டிருந்தக் காதலை- அவள் 
கைகளில் தரும் வேளை,
காலங்காலமாய் நண்பர்கள் தானே 
காதல் செய்ய இடைஞ்சல் ?
துரத்தினேன் -அவன் கால்களில் விழுந்து,
 சிரித்தபடியே வெளியில் சென்றான் 

முதல் முறை என் முகம் பார்க்காது 
அவள் தலை குனிய - நாணம் 
பொய்யல்ல என்றேன், எனக்குள்.
தித்திக்காத முகம் தானே என்று 
பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஏதும் அறியாதவள் போல் 
"ஏன் இங்கு அழைத்தாய் ? "என்றாள்.
புரிந்தும் கேட்கிறாள் என்று புரிந்தாலும் 
இயம்பாது, "முக்கியமான விடயம்" என்றேன்!!

என்ன என்று கேட்கும்- அவள் 
இதழில், ஆர்வம் இருந்தது,
தெரியாதது போல் நடிக்கும்- அவள்  
கண்ணில், பொய் இருந்தது. 

கையிலெடுத்த ரோஜாப்பூவை 
நானே கொடுக்குமுன்- என்னிடமிருந்து 
பிடுங்கி ," மிக அழகாய் இருக்கிறது"
என்று நன்றி சொன்னாள்

குழம்பிய என்னை கவனித்துக் 
கொண்டு - புன்னகை பூத்தாள்  
இது வா என் காதலைச் சொல்லும் 
வேளை ????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக